Monday 26 December 2011

தச்சுத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல்

         தச்சுத் தொழில் பரம்பரைத் தொழிலாகும். ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வாழையடி வாழையாக  இத்தொழிலைச் செய்து வருகிறர்கள். இத்தொழிலை செய்பவர்கள் கம்மாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்களை விசுவகர்மா என்றும் அழைக்கின்றனர். இவர்கள் கொல்லர், தச்சர், தட்டார், கன்னார், சிற்பி என ஐந்து பிரிவினராவார்கள்.  தச்சு வேலை செய்பவர்கள்  பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாமல் பின்தங்கிய நிலையில்தான் உள்ளார்கள்.    ஒரு சிலர் மட்டும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.  காரணம் வெளிநாடு சென்று வந்தவராக இருக்க வேண்டும் அல்லது பூர்வீக சொத்து உடையவர்களாக இருக்க வேண்டும்.  எதுவாக இருந்தாலும் இன்றைய நிலையில் தொழில் பாதிப்புக்குள்ளாகியதால் தச்சுத் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைச் சூழல் பின் தங்கிய நிலையிலேதான் இருக்கிறது.
தொழில் கற்றல் வரலாறு

சங்க காலத்திலிருந்தே தச்சுத் தொழில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. சில தொழில்கள் மட்டுமே குடும்பத்தொழிலாக இருக்கும்.  அந்த வகையில் தச்சுத் தொழில் ஒரு குடும்பத் தொழிலாகும். மரபு வழியாக செய்து வரும் தொழில்களில் தச்சுத் தொழிலும் ஒன்று. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தச்சு வேலை செய்யும்போது இளையோர்கள் அதனை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.  அவர்களுக்கு சிறு,சிறு வேலைகளை செய்ய கற்றுக்கொடுப்பார்கள்.   முதலில் இழைப்புளி இழுக்கச் சொல்வார்கள். இவ்வேலையை நன்றாக செய்தபிறகு உளியை தீட்டச் சொல்வார்கள். உளி தீட்டுவதற்கு நுணுக்கமும், கைபடிதலும் வேண்டும். பிறகு துளையை வருவை வைத்து துளைத்து போடச் சொல்வார்கள். பிறகு கூர் அடிக்கச் சொல்வார்கள். அதன் பிறகு இழைப்புளி தள்ளச் சொல்வார்கள். பிறகு மரத்தை வருவிப்போடச் சொல்வார்கள். மரத்தை வருவுவதற்கு நண்ணிய அறிவுத்திறனும் கணக்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மரத்தை ஒழுங்காக வருவிப்போட முடியும். பின்னர் மரத்தை இணைத்து ஆணி போட வேண்டும்.  இதுபோன்று  அனைத்து வேலைகளையும் கற்றுக்கொடுத்து ஒரு முழுமையான ஆசாரியை உருவாக்குவார்கள். வேலை கற்றுக்கொண்டபின் பெரிய வேலைகளை செய்து முடிக்கும்போது எஞ்சிய வேலையை செய்து முடித்துக் காட்டுமாறு கூறுவார்கள்.  தச்சுத் தொழிலை தச்சர்கள் மட்டுமே பரம்பரையாகச் செய்து வருகின்றனர். இத்தொழில் ஒரு தெய்வாம்சம் பொருந்தியத் தொழிலாகும். இத்தொழிலை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தச்சர்கள் மட்டுமே முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு வேலைக்கும் அளவுகள் உள்ளது. அந்த அளவுகளின்படி செய்தால் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும்.  இதற்கு சுமார் ஆறுமாதங்கள் ஆகும்.
தச்சுத் தொழிலை எவ்வளவு காலங்கள் கற்றாலும் ஒருசில வேலைகளைதான் கற்றுக் கொள்ள முடியும். வீடு வேலை செயப்வர்களுக்கு வீட்டில் உள்ள தளவாடச் சாமான்கள் செய்யத் தெரியாது. தளவாடச் சாமான்கள் செய்யத்தெரிந்தவர்களுக்கு வீடு கட்டத் தேவையான நிலை, கதவுகள் செய்யத் தெரியாது. இரண்டு வேலையும் தெரிந்தவர்களுக்கு பூ வேலைப்பாடுகள் செய்யத் தெரியாது. இதுபோன்று தனித்தனியேதான் வேலையைக் கற்றுக்கொள்வார்கள். அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டவர்கள் சுமார் 30 விழுக்காடுகள்தான்  இருப்பார்கள். தச்சுத் தொழிலில் அனைத்து வேலைப்பாடுகளையும் கற்றுக் கொண்டவர்கள்தான் ஒரு முழுமையான ஆசாரியாக முடியும்.  மேலும் தொழிலில் நேர்மையும், நம்பிக்கையும், நாணயமும் இருந்தால்தான் அவர்களிடம்  ஒரு வேலையினை பொறுப்பாக ஒப்படைப்பார்கள். அப்போதுதான் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைக்கும்.

முற்காலத்தில் தச்சர்களுக்கு மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் இருந்துள்ளது. கோயில் கட்டுமானப்பணிகள், தேர்பணிகள், கப்பல் கட்டும் பணிகள் முதலிய பல வேலைகளை தச்சர்களே செய்து சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளனர்.  இன்றும் கிராமங்களில் மரத்தாலான பொருட்கள் நீடித்து உழைப்பதால் அதனையே பயன்படுத்தி வருகின்றனர். இரும்பு, உலோகம், பிளாஸ்டிக் போன்றவற்றால் செய்யப்பட்ட  பொருள்கள் வருகையாள் நகர்புறங்களில் வாழும் மக்கள் இப்பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றர்.  இதன் காரணமாக மரத்தால் செய்யப்பட்ட உப்புப்பெட்டி, மர அலமாரி, முக்காலி, வடித்தட்டு, படி, மரக்கால் போன்ற பொருட்கள் புழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது.  இதன் காரணங்களினால் தச்சுத்தொழில் செய்பவர்கள் வருமானமின்றி வறுமைக்கோட்டிற்கும் கீழ் வாழ்கின்றார்கள். மேலும் நாங்கள்படும் கஷ்டம் போதும் என்றெண்ணி அவர்களின் பிள்ளைகளை கல்லுரி படிப்பிற்குப்  அனுப்புகின்றனர். படிப்பில் ஆர்வம் இல்லாத ஒரு சிலர் மட்டுமே தங்கள் குலத்தொழிலை கற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.  தச்சர்களின் வாழ்க்கையும், தொழிலும் வளர்ச்சியடைய வேண்டுமானால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மரத்தாலான பொருட்களைப் பயன்படுத்துவது மூலம் இவர்களின் வாழ்க்கை மற்றும் தொழிலினை அழியாமல் பாதுகாக்கலாம்.

Thursday 15 December 2011

தஞ்சாவூர் வீணை

           தஞ்சையில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கின்றார்கள். 1) ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளித்தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் வீணை ஏகாண்ட வீணை என்று பெயர். 2) குடம், தண்டி, யாளித்தளை ஆகியவைகளை தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் வீணையை ஒட்டு வீணை அல்லது சாதா வீணை என்று பெயர். 17ஆம் நுற்றாண்டில் தஞ்சையில் அரசர் இரகுநாத மன்னர் காலத்தில் முதன் முதலில் வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாதவீணை என்றும் பெயர் பெற்றது. மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துக் கொள்ள முடிகிறது. இதன் வாயிலாக வீணைகள் காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டும் தொழில் நுணுக்கத்துடனும் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.
         சுமார் 40 வருடங்கள் விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில்தான் வீணை செய்யப்படுகிறது. வாகை மரத்திலும் வீணை செய்யப்படுகிறது. இருப்பினும் பலா மரத்தில் செய்வதே சிறந்ததாகும். பலா மரம் பண்ருட்டி என்ற ஊரில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. அந்த ஊரின் மண் வளம் பலா வளர்வதற்கு ஏற்ற மண்ணாக இருப்பது ஓர் சிறப்பம்சமாகும். தஞ்சாவூருக்குத் தெற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டை கிராமத்தில் வசிக்கும் மருதமுத்து ஆசாரி என்பவர் சுமார் 20 வருடங்களாக தனியாக வீணை செய்யும் தொழிலைச் செய்து வருகிறார்.  கடினமான வேலையாகிய குடம், தண்டி, யாழித்தலை செய்வது போன்ற வேலைகளை ஆண்கள் செய்கின்றார்கள். சுமார் 15 வருடங்களுக்கு முன் பிளாஸ்டிக் அட்டை ஒட்டாமல் மான் கொம்பினை இழைத்து குடத்திலும் தண்டியிலும் ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்ததாகவும், தற்போது நவீன தொழில் நுணுக்க வேலைப்பாடுகள் செய்வதால் பிளாஸ்டிக் அட்டையை ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்வதாகவும் அகவல் அறியப்பட்டது. 

  
தஞ்சாவூர் வீணை

           யாழித்தலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. தஞ்சாவூரில் வீணை செய்பவர்களுக்கு நாட்டரசன்கோட்டையிலிருந்து யாழித்தலை செய்த கொடுக்கப்படுகிறது. இதன் விலை சுமார்  ரூ.150/-க்கு விற்று விடுவதாக தகவல் அறியப்பட்டது. நாட்டரசன்கோட்டையில் இரண்டுவகையான வீணைகள் செய்யப்படுகின்றன. நாட்டரசன் கோட்டையில் செய்யப்படுகின்ற வீணை சுமார் 5கி.எடைக்கு மேல் இருப்பது இல்லை. அவ்வாறு எடை குறைவாகச் செய்வது இவர்களின் தனிச்சிறப்பாகக் கருதுகின்றனர்.  இவர்கள் செய்கின்ற வீணை வெளிநாடுகளில்  குறிப்பாக சிங்கப்பூரில் சிங்கப்பூரில் நல்ல வரவேற்பு உள்ளது.  இசையில் நாட்டம் கொண்ட பள்ளி மாணவர்களுக்குப் பரிசுப் பொருளாக வீனை அளிக்கப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையின் மூலமாக தமிழக முதலமைச்சர் அறக்கட்டளை இசைப்போட்டியில் வெற்றிப் பெற்றவருக்கு ஒவ்வொரு வருடமும் வீணையைப் பரிசுப் பொருளாக அளிக்கின்றார்கள்.
          




Thursday 1 December 2011

வேளாண் கருவிகள்


காலம் காலமாக மரபு வழியாகச் செய்துவரும் தொழில்கள் பல உண்டு, அவற்றுள் வீடு கட்டுதல், கப்பல் கட்டுதல், கோயில் கட்டுதல் போன்ற கட்டுமானப் பணிகளின் பல நிலைகளில் தொழில் நுட்பங்கள் உள்ளன. பெரியகோயில், கல்லணை, செஞ்சிக்கோட்டை, வேலுர்க்கோட்டை போன்றவை நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. அதுபோல ஏர்கலப்பை, மண்வெட்டி, களைக்கொட்டு, கருக்கருவாள், அரிவாள், பரம்படிக்கும் பலகை, கவலை ஏற்றம் போன்ற கருவிகளின் தொழில் நுட்பத்தினைப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் என்ற நோக்கித்தில் மேற்கூறப்பட்ட வேளாண்மைக் கருவிகளில் உள்ள தொழில் நுட்பத்தினை விளக்கிக் கூறும் வகையில் ஆய்வு நிகழ்த்தப்பெற்றது.

வேளாண்மைக் கருவிகள், செய்யும் சமூகத்தினரின் பரம்பரைத் தொழிலா? கருவிகளின் தொழில் நுட்பம், இக்கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளனவா? இல்லை என்றால் காரணங்கள் என்ன? இக்கருவிகளுக்கு மாற்றுக் கருவிகள் உள்ளனவா? தொழில் நுட்பத்தில் மாற்றம் பெற்றுள்ளதா? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணும் நோக்கிலே நஞ்சையும் புஞ்சையும் நிறைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள தச்சுத் தொழில், கொல்லுத்தொழில் செய்யும் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்களிடம் நேரடியாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வுரை அமைகிறது.

1)ஏர்க்கலப்பை, 2)மண்வெட்டி, 3)களைக்கொட்டு, 4)பரம்படிக்கும் பலகை, 5)அடிவாள், 6)ஏற்றச்சால்(கவலை ஏற்றம்) போன்றவைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அறிவியல் முன்னேற்றம், புதிய தொழில்நுட்பக் கருவிகள் அறிமுகம் செய்வதன் காரணமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வேளாண்மைக் கருவிகள் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது என்றும் அதன் காரணமாக எங்களுடைய தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் தகவலாளர்கள் கூறினார்கள். என் தொழில் எனது தலைமுறையோடு போகட்டும் என்றும் எங்கள் தொழில் பாதிப்பதன் காரணமாக என் குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் குலத்தொழிலைக் கற்றுக்கொடுக்காமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைக்கிறோம் என்று தகவளாளர்கள் தெரிவித்தார்கள்.

அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நேரத்தினை மிச்சப்படுத்துவதும், உற்பத்தி அதிகரிப்பதும் உண்மைதான். ஏர் உழுவதற்கும், அறுவடை செய்வதற்கும் மனிதனின் ஆற்றல் அதிகமாகத் தேவைப்படுகிறது. சான்றாக ஒரு ஏக்கர் நிலத்தில் ஏர் உழுவதற்குச் சுமார் 10 ஆட்கள் தேவைப்படுகின்றனர். கூலியும் அதிகமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. அதையே ஒரு இயந்திரம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் செய்து விடுவது உண்மைதான். இதனால் கூலிவேலை செய்து பிழைக்கும் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக வறுமை அவர்களை வாட்டுகிறது. ஆக ஏழை குடிமக்கள் துன்பப்படவேண்டிய நிலை ஏற்படுகின்றது. நவீன கருவிகளின் வருகை ஏழை எளியவர்களைப் பாதிக்காத அளவிலும் பயன்படும் வகையிலும் இருப்பது நல்லது. புதிய இயந்திரங்களின் வருகையால் வேளாண்மைக் கருவிகள் உற்பத்தி செய்யும் கைவினைஞர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்கள் பொருளாதார நிலையிலும் எப்போழுதும் பின்தங்கியே உள்ளார்கள்.

மனித வாழ்க்கைக்குத் தேவையான நம் முன்னோர்கள் பயன்ப்டுத்திய சில கருவிகள் நவீன கருவிகள் வருகையால் தாக்குப்பிடிக்க முடியாமல் மெல்ல மெல்ல மறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும் ஒருசில கருவிகள் ஈடுகொடுதது அழியாமல் தொடர்கின்றன. சான்றாக, மண்வெட்டி, களைக்கொட்டு போன்றவைகள் ஆகும்.

புதிய வேளாண்மைக் கருவிகளின் தொழில் நுணுக்கம் பெரும்பாலும் நம் முன்னோர்கள் உற்பத்தி செய்த அதே தொழில் நுணுக்கத்தினையே பின்பற்றி உள்ளன. இயந்திரங்களின் உருவ அமைப்புகள் மாறி இருந்தாலும் தொழில் நுணுக்கம் ஒத்துக் காணப்படுகின்றது.(உ.ம்) கலப்பையின் அமைப்பு, சாலை மைத்தல், வண்டி அச்சில் ஓடுவது போன்றவைகள் ஆகும்.

Monday 10 October 2011

மறைந்துவரும் மரபுகள்

உலகமயமாதலின் காரணமாக புதிய பொருட்கள் வருகையால் மரபு வழியாக செய்யப்படுகின்ற கைவினைப்பொருட்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்குகிறது.  உதாரணமாக ஏர் ஓட்டும் இயந்திரம் வருகையால் மரபு வழியாக செய்துவந்த ஏர் கலப்பையின் பயன்பாடுக்ள் இல்லாமல் போய்விட்டது. கதிர் அறுக்கும் இயந்திரம் வருகையால் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக மரபு வழியாக செய்து வந்த கைவினைப் பொருளான ஏர் கலப்பை செய்யும் தொழிலாளிகள் வாழ்க்கைத்தரம் நலிவடைந்து வருகிறது.  அதைபோல மண்பாண்டம் , பாய் நெசவு , செங்கல்சூளை போன்ற மரபு வழியாக செய்யக்கூடிய தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கைவினைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் சென்றடைய எனது ஆய்வு உறுதுணையாக இருக்கும்.