Monday 26 December 2011

தச்சுத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல்

         தச்சுத் தொழில் பரம்பரைத் தொழிலாகும். ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வாழையடி வாழையாக  இத்தொழிலைச் செய்து வருகிறர்கள். இத்தொழிலை செய்பவர்கள் கம்மாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்களை விசுவகர்மா என்றும் அழைக்கின்றனர். இவர்கள் கொல்லர், தச்சர், தட்டார், கன்னார், சிற்பி என ஐந்து பிரிவினராவார்கள்.  தச்சு வேலை செய்பவர்கள்  பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாமல் பின்தங்கிய நிலையில்தான் உள்ளார்கள்.    ஒரு சிலர் மட்டும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.  காரணம் வெளிநாடு சென்று வந்தவராக இருக்க வேண்டும் அல்லது பூர்வீக சொத்து உடையவர்களாக இருக்க வேண்டும்.  எதுவாக இருந்தாலும் இன்றைய நிலையில் தொழில் பாதிப்புக்குள்ளாகியதால் தச்சுத் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைச் சூழல் பின் தங்கிய நிலையிலேதான் இருக்கிறது.
தொழில் கற்றல் வரலாறு

சங்க காலத்திலிருந்தே தச்சுத் தொழில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளன. சில தொழில்கள் மட்டுமே குடும்பத்தொழிலாக இருக்கும்.  அந்த வகையில் தச்சுத் தொழில் ஒரு குடும்பத் தொழிலாகும். மரபு வழியாக செய்து வரும் தொழில்களில் தச்சுத் தொழிலும் ஒன்று. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தச்சு வேலை செய்யும்போது இளையோர்கள் அதனை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.  அவர்களுக்கு சிறு,சிறு வேலைகளை செய்ய கற்றுக்கொடுப்பார்கள்.   முதலில் இழைப்புளி இழுக்கச் சொல்வார்கள். இவ்வேலையை நன்றாக செய்தபிறகு உளியை தீட்டச் சொல்வார்கள். உளி தீட்டுவதற்கு நுணுக்கமும், கைபடிதலும் வேண்டும். பிறகு துளையை வருவை வைத்து துளைத்து போடச் சொல்வார்கள். பிறகு கூர் அடிக்கச் சொல்வார்கள். அதன் பிறகு இழைப்புளி தள்ளச் சொல்வார்கள். பிறகு மரத்தை வருவிப்போடச் சொல்வார்கள். மரத்தை வருவுவதற்கு நண்ணிய அறிவுத்திறனும் கணக்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மரத்தை ஒழுங்காக வருவிப்போட முடியும். பின்னர் மரத்தை இணைத்து ஆணி போட வேண்டும்.  இதுபோன்று  அனைத்து வேலைகளையும் கற்றுக்கொடுத்து ஒரு முழுமையான ஆசாரியை உருவாக்குவார்கள். வேலை கற்றுக்கொண்டபின் பெரிய வேலைகளை செய்து முடிக்கும்போது எஞ்சிய வேலையை செய்து முடித்துக் காட்டுமாறு கூறுவார்கள்.  தச்சுத் தொழிலை தச்சர்கள் மட்டுமே பரம்பரையாகச் செய்து வருகின்றனர். இத்தொழில் ஒரு தெய்வாம்சம் பொருந்தியத் தொழிலாகும். இத்தொழிலை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தச்சர்கள் மட்டுமே முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு வேலைக்கும் அளவுகள் உள்ளது. அந்த அளவுகளின்படி செய்தால் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும்.  இதற்கு சுமார் ஆறுமாதங்கள் ஆகும்.
தச்சுத் தொழிலை எவ்வளவு காலங்கள் கற்றாலும் ஒருசில வேலைகளைதான் கற்றுக் கொள்ள முடியும். வீடு வேலை செயப்வர்களுக்கு வீட்டில் உள்ள தளவாடச் சாமான்கள் செய்யத் தெரியாது. தளவாடச் சாமான்கள் செய்யத்தெரிந்தவர்களுக்கு வீடு கட்டத் தேவையான நிலை, கதவுகள் செய்யத் தெரியாது. இரண்டு வேலையும் தெரிந்தவர்களுக்கு பூ வேலைப்பாடுகள் செய்யத் தெரியாது. இதுபோன்று தனித்தனியேதான் வேலையைக் கற்றுக்கொள்வார்கள். அனைத்து வேலைகளையும் கற்றுக்கொண்டவர்கள் சுமார் 30 விழுக்காடுகள்தான்  இருப்பார்கள். தச்சுத் தொழிலில் அனைத்து வேலைப்பாடுகளையும் கற்றுக் கொண்டவர்கள்தான் ஒரு முழுமையான ஆசாரியாக முடியும்.  மேலும் தொழிலில் நேர்மையும், நம்பிக்கையும், நாணயமும் இருந்தால்தான் அவர்களிடம்  ஒரு வேலையினை பொறுப்பாக ஒப்படைப்பார்கள். அப்போதுதான் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைக்கும்.

முற்காலத்தில் தச்சர்களுக்கு மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் இருந்துள்ளது. கோயில் கட்டுமானப்பணிகள், தேர்பணிகள், கப்பல் கட்டும் பணிகள் முதலிய பல வேலைகளை தச்சர்களே செய்து சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளனர்.  இன்றும் கிராமங்களில் மரத்தாலான பொருட்கள் நீடித்து உழைப்பதால் அதனையே பயன்படுத்தி வருகின்றனர். இரும்பு, உலோகம், பிளாஸ்டிக் போன்றவற்றால் செய்யப்பட்ட  பொருள்கள் வருகையாள் நகர்புறங்களில் வாழும் மக்கள் இப்பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றர்.  இதன் காரணமாக மரத்தால் செய்யப்பட்ட உப்புப்பெட்டி, மர அலமாரி, முக்காலி, வடித்தட்டு, படி, மரக்கால் போன்ற பொருட்கள் புழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது.  இதன் காரணங்களினால் தச்சுத்தொழில் செய்பவர்கள் வருமானமின்றி வறுமைக்கோட்டிற்கும் கீழ் வாழ்கின்றார்கள். மேலும் நாங்கள்படும் கஷ்டம் போதும் என்றெண்ணி அவர்களின் பிள்ளைகளை கல்லுரி படிப்பிற்குப்  அனுப்புகின்றனர். படிப்பில் ஆர்வம் இல்லாத ஒரு சிலர் மட்டுமே தங்கள் குலத்தொழிலை கற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்.  தச்சர்களின் வாழ்க்கையும், தொழிலும் வளர்ச்சியடைய வேண்டுமானால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மரத்தாலான பொருட்களைப் பயன்படுத்துவது மூலம் இவர்களின் வாழ்க்கை மற்றும் தொழிலினை அழியாமல் பாதுகாக்கலாம்.

1 comment:

  1. அருமையான கட்டுரை. கடைசி வரி... 100% உண்மை.

    ReplyDelete