Thursday 1 December 2011

வேளாண் கருவிகள்


காலம் காலமாக மரபு வழியாகச் செய்துவரும் தொழில்கள் பல உண்டு, அவற்றுள் வீடு கட்டுதல், கப்பல் கட்டுதல், கோயில் கட்டுதல் போன்ற கட்டுமானப் பணிகளின் பல நிலைகளில் தொழில் நுட்பங்கள் உள்ளன. பெரியகோயில், கல்லணை, செஞ்சிக்கோட்டை, வேலுர்க்கோட்டை போன்றவை நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. அதுபோல ஏர்கலப்பை, மண்வெட்டி, களைக்கொட்டு, கருக்கருவாள், அரிவாள், பரம்படிக்கும் பலகை, கவலை ஏற்றம் போன்ற கருவிகளின் தொழில் நுட்பத்தினைப் பதிவு செய்வதால் எதிர்காலத்தில் வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் என்ற நோக்கித்தில் மேற்கூறப்பட்ட வேளாண்மைக் கருவிகளில் உள்ள தொழில் நுட்பத்தினை விளக்கிக் கூறும் வகையில் ஆய்வு நிகழ்த்தப்பெற்றது.

வேளாண்மைக் கருவிகள், செய்யும் சமூகத்தினரின் பரம்பரைத் தொழிலா? கருவிகளின் தொழில் நுட்பம், இக்கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளனவா? இல்லை என்றால் காரணங்கள் என்ன? இக்கருவிகளுக்கு மாற்றுக் கருவிகள் உள்ளனவா? தொழில் நுட்பத்தில் மாற்றம் பெற்றுள்ளதா? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணும் நோக்கிலே நஞ்சையும் புஞ்சையும் நிறைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள தச்சுத் தொழில், கொல்லுத்தொழில் செய்யும் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்களிடம் நேரடியாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வுரை அமைகிறது.

1)ஏர்க்கலப்பை, 2)மண்வெட்டி, 3)களைக்கொட்டு, 4)பரம்படிக்கும் பலகை, 5)அடிவாள், 6)ஏற்றச்சால்(கவலை ஏற்றம்) போன்றவைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அறிவியல் முன்னேற்றம், புதிய தொழில்நுட்பக் கருவிகள் அறிமுகம் செய்வதன் காரணமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வேளாண்மைக் கருவிகள் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது என்றும் அதன் காரணமாக எங்களுடைய தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் தகவலாளர்கள் கூறினார்கள். என் தொழில் எனது தலைமுறையோடு போகட்டும் என்றும் எங்கள் தொழில் பாதிப்பதன் காரணமாக என் குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் குலத்தொழிலைக் கற்றுக்கொடுக்காமல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைக்கிறோம் என்று தகவளாளர்கள் தெரிவித்தார்கள்.

அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நேரத்தினை மிச்சப்படுத்துவதும், உற்பத்தி அதிகரிப்பதும் உண்மைதான். ஏர் உழுவதற்கும், அறுவடை செய்வதற்கும் மனிதனின் ஆற்றல் அதிகமாகத் தேவைப்படுகிறது. சான்றாக ஒரு ஏக்கர் நிலத்தில் ஏர் உழுவதற்குச் சுமார் 10 ஆட்கள் தேவைப்படுகின்றனர். கூலியும் அதிகமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. அதையே ஒரு இயந்திரம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் செய்து விடுவது உண்மைதான். இதனால் கூலிவேலை செய்து பிழைக்கும் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக வறுமை அவர்களை வாட்டுகிறது. ஆக ஏழை குடிமக்கள் துன்பப்படவேண்டிய நிலை ஏற்படுகின்றது. நவீன கருவிகளின் வருகை ஏழை எளியவர்களைப் பாதிக்காத அளவிலும் பயன்படும் வகையிலும் இருப்பது நல்லது. புதிய இயந்திரங்களின் வருகையால் வேளாண்மைக் கருவிகள் உற்பத்தி செய்யும் கைவினைஞர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்கள் பொருளாதார நிலையிலும் எப்போழுதும் பின்தங்கியே உள்ளார்கள்.

மனித வாழ்க்கைக்குத் தேவையான நம் முன்னோர்கள் பயன்ப்டுத்திய சில கருவிகள் நவீன கருவிகள் வருகையால் தாக்குப்பிடிக்க முடியாமல் மெல்ல மெல்ல மறைந்துகொண்டே வருகிறது. இருப்பினும் ஒருசில கருவிகள் ஈடுகொடுதது அழியாமல் தொடர்கின்றன. சான்றாக, மண்வெட்டி, களைக்கொட்டு போன்றவைகள் ஆகும்.

புதிய வேளாண்மைக் கருவிகளின் தொழில் நுணுக்கம் பெரும்பாலும் நம் முன்னோர்கள் உற்பத்தி செய்த அதே தொழில் நுணுக்கத்தினையே பின்பற்றி உள்ளன. இயந்திரங்களின் உருவ அமைப்புகள் மாறி இருந்தாலும் தொழில் நுணுக்கம் ஒத்துக் காணப்படுகின்றது.(உ.ம்) கலப்பையின் அமைப்பு, சாலை மைத்தல், வண்டி அச்சில் ஓடுவது போன்றவைகள் ஆகும்.

No comments:

Post a Comment